இன்று உங்களுக்குக்கான கிருபை
9 ஜூன் 2026
தலைப்பு:தரிசனத்தின் இலக்கு
வேத வாசிப்பு:
எரேமியா 1:11–12
“மேலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: ‘எரேமியாவே, நீ என்ன காண்கிறாய்?’ என்றார். அதற்கு நான்: ‘ஒரு வாதுமைக் கிளையைக் காண்கிறேன்’ என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: ‘நீ நன்றாகக் கண்டாய்; ஏனெனில், என் வார்த்தையை நிறைவேற்ற நான் ஆயத்தமாயிருக்கிறேன்’ என்றார்.”
முன்னேற்றத்தின் இலக்கை ஆராயத் தொடங்கும்போது,பரிசுத்த ஆவியானவர் முதலில் நம்மை ‘தரிசனத்தின் இலக்கு ’ என்ற உண்மைக்குள் வழிநடத்துகிறார்.
தரிசனம் என்பது உங்கள் அடுத்த கட்டத்தின் தெளிவான படமாகும். அது உங்கள் வாழ்க்கையைக் குறித்து தேவன் காண்பதைக் காண்பதாகும்—அதாவது, அவருடைய நோக்கத்தின்படி நீங்கள் என்னவாக இருக்க வேண்டும், எங்கே இருக்க வேண்டும் என்பதைக் காண்பதாகும்.
தேவன் எரேமியாவை அழைத்தபோது, அவனுக்கு என்ன தெரியும் அல்லது அவனால் என்ன செய்ய முடியும் என்று கேட்டுத் தொடங்கவில்லை. மாறாக, “நீ என்ன காண்கிறாய்?” என்று கேட்டார். இது முன்னேற்றம் தரிசனத்துடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
எரேமியாவின் சந்திப்பிலிருந்து, நாம் மூன்று முக்கிய உண்மைகளைக் கற்றுக்கொள்கிறோம்:
➢ உங்கள் முன்னேற்றம், நீங்கள் எவ்வளவு நன்றாகக் காண்கிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. தேவன் உங்கள் சூழ்நிலைகளை மாற்றுவதற்கு முன், உங்கள் தரிசனத்தைப் பெரிதாக்குகிறார்.
➢ நீங்கள் சரியாகக் காணும்போது, தேவன் வேகத்தைப் பயன்படுத்துகிறார். வாதுமை மரம் விழிப்புணர்வு மற்றும் விரைவுடன் தொடர்புடையது. எரேமியா துல்லியமாகக் கண்டபோது, தமது வார்த்தையை விரைவாக நிறைவேற்றத் தாம் ஆயத்தமாயிருக்கிறதாக தேவன் அறிவித்தார்.
➢ எரேமியா கண்டது ஆவி உலகத்தில் இருந்தது. அவர் இயற்கைக்கு அப்பால் உணர்ந்து, தேவனுடைய கண்ணோட்டத்துடன் தன்னை ஒன்றுப்படுத்திக்கொண்டார்.
இன்று, பரிசுத்த ஆவியானவர் உங்கள் ஆவிக்குரிய பார்வையைக் கூர்மைப்படுத்தும்படி கேளுங்கள்.
சரியாகக் காண்கிறவர்கள் சரியாக நகர்வார்கள்; சரியாக நகருகிறவர்கள் விரைவாக முன்னேறுவார்கள்.
ஜெபம்
பரலோகத் தகப்பனே,என் வாழ்க்கையையும் ,இலக்கையையும் குறித்து நீர் காண்பதைக் காணும்படி என் கண்களைத் திறந்தருளும். எல்லா ஆவிக்குரிய குருட்டுத்தன்மையும் நீக்கப்படட்டும், என் அடுத்த கட்டத்திற்கான தெளிவான தரிசனத்தை எனக்குத் தந்தருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
விசுவாச அறிக்கை
இயேசு கிறிஸ்துவுக்குள் நான் தேவனுடைய நீதியுள்ளவன்.
தேவனுடைய ஆவியால் நான் தெளிவாகக் காண்கிறேன். என் தரிசனம் என் வாழ்க்கைக்கான தேவனுடைய நோக்கத்துடன் ஒத்துப்போகிறது. நான் வாய்ப்புகளையும், சாத்தியங்களையும், என் அடுத்த கட்டத்தையும் காண்கிறேன். நான் சரியாகக் காணும்போது, நான் விரைவாக முன்னேறுகிறேன், இறைவனுடைய வார்த்தை என் வாழ்க்கையில் நிறைவேறுகிறது. ஆமென்.
உயிர்த்தெழுந்த இயேசுவைத் துதியுங்கள்
கிருபை புரட்சி நற்செய்தி பேராலயம்
