இன்று உங்களுக்குக்கான கிருபை
24 ஜூன் 2026
தலைப்பு:மறுரூபமாதலின் இலக்கு (பகுதி 2)
வேதவசனம்:2 கொரிந்தியர் 3:18
“நாமெல்லாரும்… கர்த்தருடைய ஆவியானவராலே மகிமையின்மேல் மகிமை அடைந்து, அதே சாயலாக மறுரூபமாக்கப்படுகிறோம்.”
தேவனின் உன்னதமான நோக்கம் நம்மை அவருடைய குமாரனின் சாயலாக மாற்றுவதும், நமக்கான அவருடைய மிக சிறந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க செய்வதுமே என்பதைப் புரிந்துகொண்ட நிலையில், இந்த மறுரூபமாதல் செயல்முறையில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன:
1. இறுதி விளைவு — கிறிஸ்துவின் சிந்தை
நடத்தையை சீரமைப்பது மட்டுமல்ல தேவனின் நோக்கம்; மாறாக, கிறிஸ்துவைப் போலவே சிந்தித்து, பார்த்து, செயல்படும் வகையில் மனதைப் புதுப்பிப்பதே அவருடைய இலக்கு (1 கொரிந்தியர் 2:16).
2. செயல்முறை — பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல்
பரிசுத்த ஆவியானவரே தெய்வீக வழிகாட்டி; அவரே நம்மைத் தேவனின் வழிமுறைக்குள் நடத்தி, நமது மறுரூபமாதலின் ஒவ்வொரு அடியையும் வடிவமைக்கிறார் (யோவான் 16:13).
3. நமது தற்போதைய நிலை — கீழ்ப்படிதல்
பரிசுத்த ஆவியானவர் தேர்ந்தெடுக்கும் வழிமுறைக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதே நமது பொறுப்பு. ஒவ்வொரு விசுவாசிக்கும் அவருடைய செயல்முறை மாறுபடலாம், ஆனால் அவர் கொண்டு செல்லும் இலக்கு ஒன்றே: அது கிறிஸ்துவைப் போன்ற சாயலைப் பெறுதல்.
மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட காரியங்களை வாக்குத்தத்தம் செய்துள்ள தேவன் அதை கண்காணித்து நிறைவேற்றுகிறார் (1 கொரிந்தியர் 2:9); அதே வேளையில், பரிசுத்த ஆவியானவருக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்து, அவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவருடைய சிந்தையை நாம் கொண்டிருப்பதே நமது கவனமாக இருக்க வேண்டும்.
நீதிமொழிகள் 23:7 கற்பிப்பது போல, “ஒருவன் தன் இருதயத்தில் எப்படி நினைக்கிறானோ, அப்படியே அவனும் இருக்கிறான்.” கிறிஸ்து சிந்திப்பதைப் போலவே சிந்திக்கப் பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்றுத்தரும்போது, நாமும் படிப்படியாக கிறிஸ்துவைப் போலவே மாறுகிறோம்.
பயம்,கவலை மற்றும் விரக்தி ஆகியவை பெரும்பாலும் ஆவிக்குரிய குறுகிய பார்வையினாலேயே எழுகின்றன—அதாவது, தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமை அல்லது அவர் தேர்ந்தெடுத்த செயல்முறையை எதிர்த்தல் ஆகியவற்றால் இவை ஏற்படுகின்றன.இலக்கு மற்றும் அதற்கான பாதை ஆகிய இரண்டையும் பரிசுத்த ஆவியானவர் அறிவார் என்ற உறுதியிலேயே விசுவாசம் நிலைத்திருக்கிறது.
முக்கியக் கருத்து:
பரிசுத்த ஆவியானவரின் செயல்முறை மாறுபடலாம், ஆனால் அவர் கொண்டு செல்லும் இலக்கு ஒருபோதும் மாறுவதில்லை—அதுவே கிறிஸ்துவின் சிந்தையும், தேவன் அருளும் மிக சிறந்த அனுபவமும் ஆகும்.
ஜெபம்
அன்புத் தகப்பனே, உம்முடைய குமாரனின் சாயலாக என்னை மாற்றும் உம்முடைய நோக்கத்திற்காக உமக்கு நன்றி. என் மனம், இருதயம் மற்றும் விருப்பம் ஆகியவற்றை பரிசுத்த ஆவியானவரிடம் ஒப்புக்கொடுக்கிறேன். உம்முடைய செயல்முறையை நம்பவும், மகிழ்ச்சியோடும் கீழ்ப்படிதலோடும் உம்முடைய வழிநடத்துதலைப் பின்பற்றவும் எனக்கு உதவும்.இயேசுவின் நாமத்தில், ஆமென்.
விசுவாச அறிக்கை
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாய் இருக்கிறேன். எனக்குள் இருக்கும் கிறிஸ்துவே மகிமையின் நம்பிக்கையாய் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் என்னை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார். என் மனம் நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது; நான் கிறிஸ்துவின் சாயலுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு வருகிறேன். நான் தேவனுடைய நோக்கத்தை நம்பி, அவருடைய வழிமுறையை ஏற்றுக்கொண்டு, என் வாழ்விற்கான அவருடைய மிக சிறந்த திட்டத்தை நோக்கி தைரியமாக நடக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்.ஆமென். அல்லேலூயா!
⸻
கிருபை நற்செய்தி பேராலயம்!
